மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள புதுமண்டபத்தை சீரமைக்கும் பணிகள் தீவிரம்

மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் முடிந்த பின்னர் அங்கு ஒலி, ஒளி காட்சி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு சித்திரை வீதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரே புதுமண்டம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு திருமலைநாயக்கர் மன்னரால் கட்டப்பட்டது. மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் வைகாசி வசந்த உற்சவம், மார்கழி எண்ணெய் காப்பு உற்சவம் ஆகிய திருவிழாக்கள் இங்குள்ள மண்டபத்தில்தான் நடைபெறும். திருவிழா நாட்களை தவிர பக்தர்கள் அங்கு ஓய்வு எடுக்கும் இடமாக மாறியது.
அதை தொடர்ந்து சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கோவிலில் பூஜைக்கு தேவையான குங்குமம், தாலி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், துணி கடைகள், புத்தக கடைகள், பாத்திரக்கடைகள், பேன்சி கடைகள் என மொத்தம் 300 கடைகள் அங்கு செயல்பட்டு வந்தது.
மேலும் அந்த மண்டபத்தில் திருமலை நாயக்கர் மன்னரால் நிர்மானிக்கப்பட்ட 28 அற்புத சிலைகள் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த சிலைகளை கண்டு ரசித்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் சில ஆண்டுக்கு முன்னர் கோவில் நிர்வாகம், தொல்லியல், சுற்றுலா துறையும் இணைந்து இந்த புதுமண்டபத்தையும், அங்குள்ள கலை நயமிக்க சிலைகள், தூண்களை காணும் வகையில் அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்தது. அதன்படி அங்கிருந்த கடைகளுக்கு குன்னத்தூர் சத்திரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து அங்கிருந்த கடைகள் அனைத்தும் கடந்த 2022-ம் ஆண்டு காலி செய்யப்பட்டது.
பின்னர் புதுமண்டபத்தை தொல்லியல் துறை அனுமதியுடன் புனரமைக்கும் பணிகளை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சுமார் ரூ.2 கோடியில் செய்து வருகிறது. அதை தொடர்ந்து மண்டபத்தில் இருந்த கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் மண்டபத்தில் விரிசல் உள்ள இடங்கள் அனைத்தும் பூசப்பட்டது. இதுதவிர தூண்கள் பழமை மாறாத வகையில் நவீன முறையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் சேதம் அடைந்த சிலைகளும் சீரமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் மண்டபம் பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் அங்கு ஒலி, ஒளி காட்சி அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அவ்வாறு அனைத்து பணிகள் முடிந்த பின்னர் தான் பக்தர்கள், பொதுமக்களின் பார்வைக்கு மண்டபம் திறக்கப்படும் என்று தெரியவருகிறது. எனவே பணிகளை விரைந்து செயல்படுத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.






