சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை தமிழகத்தில் உடனடியாக தொடங்க வேண்டும் - அன்புமணி

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கர்நாடக அரசு நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
சமூகநீதி கணக்கெடுப்புக்கான பணிகளை தமிழகத்தில் உடனடியாக தொடங்க வேண்டும் - அன்புமணி
Published on

சென்னை,

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் கடந்த ஆண்டு இரண்டாம் முறையாக நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் அடங்கிய அறிக்கை அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா அவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. சமூகநீதியை காக்கும் நோக்குடன், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், இரண்டாம் முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை கர்நாடக அரசு நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் ஏற்கனவே கடந்த 2015-ஆம் ஆண்டில் முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அப்போதைய சித்தராமய்யா அரசு மேற்கொண்ட நிலையில், அதன்பின் 10 ஆண்டுகள் கழித்து புதிய தரவுகளைத் திரட்டும் நோக்குடன் கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி முதல் மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடைந்திருந்த நிலையில், அதில் கிடைத்த தரவுகள் தொகுக்கப்பட்டு அதன் அறிக்கையை அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் மதுசூதன் நாயக்கிடமிருந்து முதல்-மந்திரி சித்தராமய்யா பெற்றுக் கொண்டுள்ளார்.

சமூகநீதி கணக்கெடுப்பு

கர்நாடகத்தில் சமூகநீதியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அம்மாநில அரசு எவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியதோ, அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் சமூகநீதியை பாதுகாக்கும் நோக்குடன் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை சமூகநீதி கணக்கெடுப்பு என்ற பெயரிலாவது நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதை நடத்துவதில் தமிழக அரசுக்கு எந்த நெருக்கடியோ, சிக்கலோ இல்லை. இந்த அடிப்படையை அரசு உணர வேண்டும்.

மத்திய அரசின் சார்பில் மக்கள்தொகை கணக்கெடுப்பே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் நிலையில், மாநிலத்தின் சார்பில் தனியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமா? என்று சமூகநீதிக்கு எதிரான சக்திகளால் திசைதிருப்பும் வினாக்கள் எழுப்படுகின்றன. மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டாலும், தமிழகத்தின் சமூகநீதி சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தேவையான தரவுத் தளத்தைக் கட்டமைக்க தமிழ்நாட்டின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்ட விவரங்களை விட கூடுதலாக ஓபிசி சாதி விவரம் மட்டுமே சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூக நிலையை அறிய உதவாது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல. அதனால் தான் சமூக நீதியை நிலைநாட்ட மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன்.

கர்நாடகத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் போது 54 வினாக்களும், தெலுங்கானத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் போது 75 வினாக்களும் எழுப்பி அதற்கான விடைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் தான் அம்மாநில மக்களின் சமூகப் பொருளாதார நிலை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் தான் தமிழ்நாட்டிலும் விரிவான முறையில் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, தொழில்நுட்பக் காரணங்களின் அடிப்படையில் நேற்று முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அதை எதிர்ப்பதற்காக சமூகநீதியின் எதிரிகள் முன்வைத்த காரணங்கள் அப்படியே இருப்பதால், எந்த நேரமும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்படலாம். அதை எதிர்கொள்ளவும் சமூகநீதி சர்வே அவசியம்.

இவை அனைத்துக்கும் மேலாக, “ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி கணக்கீட்டு சர்வே மேற்கொள்ளப்படும்” என்பது தான் ஆளும் த.வெ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் வாக்குறுதி என்பதால் அதையும் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது. இத்தகைய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com