6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு தகவல்

பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
6,540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் தீவிரம் - தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2021-ல் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டு குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் என பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார். அந்த வகையில் எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாக தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கை புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்குடைய ஒரு விரிவான குழந்தை மைய பார்வையை கொண்டதாக அமைந்துள்ளது.

கொரோனா கால கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டம்தான் இல்லம் தேடி கல்வி திட்டம். இந்த திட்டத்துக்கு 2025-26 கல்வியாண்டில் ரூ.44.14 கோடி ஒதுக்கீட்டில் செயல்பட்டு வரும் 34 ஆயிரம் இல்லம் தேடி கல்வி மையங்களில் 5 லட்சத்து 986 மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025-ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணித திறன்கள் அடைவதை உறுதி செய்யவும் நடைமுறைப்படுத்தப்பட்ட எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் 37 ஆயிரத்து 767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 25.08 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

தமிழில் சரளமாக வாசிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடையே உறுதி செய்யும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட வாசிப்பு இயக்கத்தில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 44.50 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர். 28 ஆயிரத்து 67 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் அதிவேகமான இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஆயிரத்து 540 அரசு பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.352.42 கோடியில் 44 மாதிரி பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த 28 மாவட்டங்களில் தலா ஒன்று வீதம் தகைசால் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலினின் சிறப்பு திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரில் விருது, அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது ஆகியவற்றுடன் அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி செலவினத்திற்கான உதவித்தொகை ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com