சென்னையில் ரூ.3 கோடியில் 94 சாலை சந்திப்பு வளைவுகள் மேம்படுத்தும் பணி; மாநகராட்சி தகவல்

மேலும், 600 சாலை சந்திப்பு வளைவுகளில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ள திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ரூ.3 கோடியில் 94 சாலை சந்திப்பு வளைவுகள்  மேம்படுத்தும் பணி; மாநகராட்சி தகவல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

மேம்படுத்தும் பணி

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வரையுள்ள மண்டலங்களில் உள்ள முக்கிய பிரதான சாலை சந்திப்புகளில் விபத்துகளின்றி சீரான போக்குவரத்திற்காக இந்த சந்திப்புகளில் உள்ள சாலை வளைவுகளை (Bell Mouth) மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 418.56 கி.மீ. நீளமுடைய 488 எண்ணிக்கையிலான பேருந்து தடசாலைகளும், 5,653.89 கி.மீ. நீளமுடைய 35,978 எண்ணிக்கையிலான உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்தை எளிதாக்கும்

பெருநகர சென்னை மாநகராட்சியின் சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாநகராட்சி பேருந்து தடசாலைகளில் இணைகின்றன. இவ்வாறு இணைகின்ற சாலை சந்திப்புகளில் வாகனப் போக்குவரத்து எளிதாகும் வகையில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு சாலையோர சந்திப்புகளை போக்குவரத்து மேலாண்மை வழிகாட்டுதலின்படி திருத்தியமைப்பதன் மூலம் சந்திப்புகளில் அமைந்துள்ள வளைவுகளில் (Bellmouths) வாகனங்கள் எளிதாகவும் வேகமாகவும் செல்ல இயலும். இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு ஆக்கிரமிப்பு ஏற்படாதவாறு தடுக்க இயலும். மேலும், பாதசாரிகள் அச்சமின்றி பாதுகாப்பாக நடப்பதற்கும் வழிவகையாக உள்ளது.

திட்ட அறிக்கை

முதற்கட்டமாக முக்கிய பிரதான சாலை சந்திப்பு வளைவுகளில் (Bellmouths) 94 சாலை சந்திப்பு வளைவுகளை மேம்படுத்துவதற்கு ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் ஈ.வெ.ரா. சாலையில் டெய்லர்ஸ் சாலை, பிளவர்ஸ் சாலை, புதிய ஆவடி சாலை, வாசு தெரு, அழகப்பா சாலை, டாக்டர் நாயர் சாலை மற்றும் கெங்குரெட்டி சுரங்கப்பாதை சாலை, அசோக் நகர் 10வது அவென்யூ சந்திப்பு, பி.டி. ராஜன் சாலை சந்திப்பு, சர்தார் பட்டேல் சாலை, கால்வாய் சாலை சந்திப்பு, திருவான்மியூர் சந்திப்பு, எம்.கே.பி நகர் சாலை சந்திப்பு, டேம்ஸ் சாலை சந்திப்பு, ரிதர்டன் சாலை சந்திப்பு மற்றும் வேப்பேரி சாலை ஈ.வி.கே. சாலை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் 15.07.2026க்குள் முடிக்கப்படும்.

இதன் தொடர்ச்சியாக, 600 எண்ணிக்கையிலான சாலை சந்திப்பு வளைவுகள் மேம்படுத்தும் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com