

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 49), தொழிலாளி. இவரது மகன் கனகராஜ்(22). மதுப் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜ், அடிக்கடி வீட்டில் பணம் கேட்டுத் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
கடந்த 15ம் தேதி இரவு கனகராஜ் தனது தந்தையிடம், தனது மோட்டார் சைக்கிளைப் பழுது பார்ப்பதற்கும் மது குடிப்பதற்கும் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். பாலச்சந்திரன் பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது, கனகராஜ் தனது தந்தையைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், அருகில் இருந்த கம்பால் கனகராஜைத் தாக்கியதுடன், வீட்டில் இருந்த கிரைண்டர் குழவிக்கல்லைத் தூக்கி மகனின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கனகராஜ், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த எட்டயபுரம் காவல் நிலைய போலீசார், கனகராஜின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலச்சந்திரனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை தந்தையே கொடூரமாகக் கொலை செய்த இந்த சம்பவம் எட்டயபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.