

திருப்பூர்,
திருப்பூரில் 12 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று, கைகளை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி சிக்கினார். போலீசாரிடம் இருந்து தப்பி ஓடியபோது அவரது கால் முறிந்தது.
திருப்பூரை சேர்ந்த 12 வயது சிறுமி, அரசு பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் இரவு சிறுமி அங்குள்ள காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றாள். அப்போது, அவளை பின் தொடர்ந்து 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் சென்றார். இதை கவனித்த சிறுமி, பயத்தில் வாலிபரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து அலறியபடி ஓட்டம் பிடித்தாள். அந்த வாலிபர், சிறுமியை சிறிது தூரம் துரத்தி சென்று பிடித்தார். பின்னர் சிறுமியின் வாயை பொத்தி, அங்குள்ள காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்றார். அதிர்ச்சியில் உறைந்த சிறுமி, மயக்கம் அடைந்தார். அதன் பின்னர் அந்த சிறுமியை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தார். அதன் பிறகு சிறுமியை கட்டிப்போட்டு விட்டு, அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதற்கிடையே சிறுமியை காணாததால், அவரது பெற்றோர் அவளை தேடினர். இருப்பினும் சிறுமி பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் காட்டுப்பகுதியில் சிறுமியின் அழுகுரலை கேட்ட அக்கம் பக்கத்தினர், அங்கு ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது அங்கு கைகள் கட்டப்பட்ட நிலையில் சிறுமி தரையில் கிடந்தாள். உடனே சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போக்சோ வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தவர், திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த விஷ்ணு (வயது 26) என்பது தெரியவந்தது. இவர், அம்மிக்கல் விற்பனை செய்து வருகிறார். விஷ்ணுவின் சொந்த ஊர் கேரள மாநிலம் கொல்லம் ஆகும். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு தனது மாமனாரின் வீட்டில் விஷ்ணு குடும்பத்துடன் தங்கி இருப்பதும் தெரியவந்தது.
தலைமறைவான விஷ்ணுவை தனிப்படை போலீசார் வலைவீசி தேடினர். அப்போது அவர், அய்யம்பாளையம் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விஷ்ணுவை கைது செய்ய போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றனர். போலீசாரை கண்டதும், அவர் அங்கிருந்து தப்பியோடினார். ஆனாலும், போலீசார் விடாமல் அவரை துரத்தி சென்றனர். அப்போது, கீழே விழுந்ததில் விஷ்ணுவின் இடது கால் முறிந்தது.
இதற்கிடையே விஷ்ணுவை போலீசார் கைது செய்து, சிகிச்சைக்காக அவரை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.