ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.15 லட்சத்தை இழந்த தொழிலாளி தற்கொலை
சேலம்,
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே கருக்கல்வாடி சஞ்சீவிராயன்கோவில் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுகன்யா. கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. இதனிடையே, திருமணத்திற்கு முன்பே பிரகாஷ்ராஜிக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இதனால் அவர் இதுவரை ரூ.15 லட்சம் வரை ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த சுகன்யா, கணவரிடம் ஆன்லைன் சூதாட்டத்தை கைவிடுமாறும், ஏற்கனவே ரூ.15 லட்சம் வரை நாம் இழந்துவிட்டதால் எதற்காக இப்படி பண்ணுகிறாய்? என்று கேட்டு கண்டித்துள்ளார். ஆனால் மனைவியின் பேச்சை கேட்காத பிரகாஷ்ராஜ், வேலைக்கு சரிவர செல்லாமல் ஆன்லைன் சூதாட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரகாஷ்ராஜ் திடீ ரென வீட்டிற்குள் உள்ள ஒரு அறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். இதையடுத்து சிறிது நேரம் கழித்து மனைவி சுகன்யா, கதவை திறக்குமாறு கூறியும் அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
அப்போது, பிரகாஷ்ராஜ் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, பிரகாஷ்ராஜ் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து தாரமங்கலம் போலீசில் சுகன்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

