

திருவள்ளூர்,
கள்ளக்காதலி வீட்டில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் 34 வயது பெண். இவர் தனது கணவர், 2 மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். அந்த பெண் தினந்தோறும் தனது பிள்ளைகளை ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள தனியார் பள்ளிக்கு கூட்டி சென்று மாலையில் கூட்டி வருவது வழக்கம். அப்போது அவருக்கும் சோளிங்கரை சேர்ந்த கூலித்தொழிலாளி அருள் பாண்டி (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலன் அருள் பாண்டி தனது கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். கள்ளக்காதலியை உல்லாசமாக இருப்பதற்காக அவர் அழைத்தார். அதற்கு அந்த பெண் மறுத்தார்.
மேலும் நமக்குள் இருக்கும் பழக்கத்தை நிறுத்தி கொள்ளலாம். இனிமேல் என்னை உல்லாசத்துக்கு அழைக்க வேண்டாம் என்று அவர் கூறியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த அருள் பாண்டி கள்ளக்காதலி வீட்டுக்குள் சென்று ஒரு அறையில் உள் பக்கம் பூட்டி கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து பார்த்தபோது அங்கே அருள்பாண்டி கள்ளக்காதலியின் சேலையில் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.