

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அயன் பொம்மையாபுரம், வண்டிமலச்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (38). கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்த இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மனைவி அருகிலுள்ள பால் பண்ணையில் வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இரவு, அதிகமாக மது அருந்திய கோவிந்தராஜ் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி மாடியிலிருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.