

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் மாசார்பட்டி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த ஆலையில் சுமார் 60-க்கு மேற்பட்ட அறைகள் உள்ளன. விபத்து ஏற்பட்ட சமயத்தில் சுமார் 50-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையில் இருந்துள்ளனர்.
இன்று சனிக்கிழமை என்பதால் சம்பளம் போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆலையில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். மேலும், சுமார் 25-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடி விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.