10-ம் வகுப்பு மாணவனை கொன்று தொழிலாளி தற்கொலை: காரணம் என்ன..?

கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேசாமல் இருந்து உள்ளனர்.
10-ம் வகுப்பு மாணவனை கொன்று தொழிலாளி தற்கொலை: காரணம் என்ன..?
Published on

சேலம்,

10-ம் வகுப்பு மாணவனை கழுத்தை நெரித்துக்கொன்று விட்டு தறித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நண்பர்கள்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மனைவி விஜயலட்சுமி. கூலித்தொழிலாளர்கள். இவர்களுடைய மகன் தவுசிக் (வயது 15). இவன் கே.ஆர்.தோப்பூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். தவுசிக்கும், இடங்கணசாலை அருகே உள்ள சிட்டனூரை சேர்ந்த வடிவேல் என்பவரின் மகனும், விசைத்தறி தொழிலாளியுமான சிவராஜ் (24) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து வீட்டில் இருந்த தவுசிக்கை, சிவராஜ் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வெளியில் சென்று உள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவர்களது பெற்றோர் 2 பேரையும் இரவு முழுவதும் பல இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து மகுடஞ்சாவடி போலீசில் புகார் கொடுத்தனர்.

கழுத்தை நெரித்துக்கொலை

இந்த நிலையில் கே.ஆர்.தோப்பூர் சாலையில் உள்ள மேட்டுக்காடு பகுதியில் இரும்பாலைக்கு சொந்தமான இடத்தில் தவுசிக், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர் விரைந்து சென்று தவுசிக் உடலை பார்த்து கதறி அழுதனர். அப்போது சிவராஜ் தான் தங்கள் மகனை கொலை செய்து இருப்பான் என்று கூச்சலிட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சிவராஜை தேடத்தொடங்கினர். அதே நேரத்தில், தாரமங்கலம் அருகே உள்ள பெரியபட்டி சுடுகாடு பகுதியில் ஒரு மரத்தில் சிவராஜ் தூக்கில் பிணமாக தொங்கினார். இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீசார் கொலை வழக்கும், தாரமங்கலம் போலீசார் தற்கொலை வழக்கும் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

என்ன காரணம்..?

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

தவுசிக், சிவராஜ் 2 பேரும் நண்பர்களாக பழகி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் பேசாமல் இருந்து உள்ளனர். நேற்று முன்தினம் தவுசிக்கை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றபோது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு இருக்கலாம். இதில் ஆத்திரம் அடைந்த சிவராஜ், தவுசிக்கின் கழுத்தை நெரித்து கொலை செய்து இருக்கலாம். பின்னர் பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும் இவர்கள் செல்போனில் பிரிபயர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் அடிக்கடி ஈடுபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. குடிபோதையில் கொலை செய்து விட்டு தற்கொலை நடந்ததா? அல்லது ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் இந்த கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com