திருவண்ணாமலையில் கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி மீட்பு!

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், இரவு முழுவதும் கிணற்றுக்குள் நின்றபடி உயிருக்கு போராடியுள்ளார்.
திருவண்ணாமலையில் கிணற்றில் விழுந்து இரவு முழுவதும் உயிருக்கு போராடிய தொழிலாளி மீட்பு!
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற தொழிலாளி ஒருவர் தவறி விவசாய கிணற்றில் விழுந்து, இரவு முழுவதும் உயிருக்கு போராடிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் (35). தொழிலாளியான இவர், அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்திருந்தார்.

நேற்று முன்தினம் மாலை இனாம்காரியந்தல் – கோடிகுப்பம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அப்பகுதியில் இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தார். கிணற்றில் அதிகளவில் தண்ணீர் இருந்ததாலும், நீச்சல் தெரியாததாலும் தண்ணீரில் தத்தளித்த அருண்குமார், அங்கிருந்த மோட்டாரின் பிளாஸ்டிக் பைப்பை பிடித்துக்கொண்டு உயிர் தப்ப முயன்றார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அவர் எழுப்பிய உதவிக்குரல் யாருக்கும் கேட்கவில்லை. இதனால் இரவு முழுவதும் கிணற்றுக்குள் நின்றபடி உயிருக்கு போராடியுள்ளார்.

நேற்று காலை கிணற்றின் உரிமையாளரின் மகன் மோட்டார் இயக்குவதற்காக அங்கு சென்றபோது, கிணற்றுக்குள் இருந்து சத்தம் கேட்டு பார்த்துள்ளார். அப்போது அருண்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து நிலைய அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றுக்குள் இறங்கி அருண்குமாரை பத்திரமாக மீட்டனர்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரு நாள் முழுவதும் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிய இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com