மதுவுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினையில் தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு - நண்பர் வெறிச்செயல்

கோப்புப்படம்
நண்பர்களுக்குள் மதுவுக்கு பணம் கொடுக்கும் பிரச்சினையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள பெருமாள்குளத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (56 வயது). பனைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (56 வயது. நண்பர்களான இருவரும் உடைமரம் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். தினமும் ஒன்றாக வேலைக்கு செல்வதும், மாலையில் டாஸ்மாக் பாருக்கு சென்று ஒன்றாக மது குடிப்பதும் வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலையில் இருவரும் பேய்க்குளம் டாஸ்மாக் பாருக்கு சென்று ஒன்றாக மது அருந்தினர். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது, சுடலைமணி, ‘மது வாங்குவதற்கு தினமும் நான்தான் பணம் கொடுக்கிறேன். நீ மது வாங்கி தருவதில்லை’ என செல்வகுமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வகுமார், தான் வைத்திருந்த அரிவாளால் சுடலைமணியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த அவர் டாஸ்மாக கடை முன்பு ரத்தவௌ்ளத்தில் கிடந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த சுடலைமணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய செல்வகுமாரை கைது செய்தனர்.






