

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், 70-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் தருகிறது. உயிரிழப்பு கூடுதலாக இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி செலுத்துகிறது. அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு, உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது. அமோனியா வாயு கசிவால், பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்கள் விரைவில் குணமடைய விழைகிறது.
இந்தக் கோர விபத்துக் குறித்து நீதி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும். தமிழ்நாட்டில் இயங்கும் ஆலைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணியிட பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்திட வேண்டும்.
இவ்விபத்தில் உயிரிழந்த அனைத்துத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் உரிய இழப்பீட்டை வழங்கிட வேண்டும். சிகிச்சை பெற்றுவருவோருக்கு தரமான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.