கூலியை உயர்த்தக்கோரி தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

குமரியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூலியை உயர்த்தக்கோரி தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
Published on

நாகர்கோவில்:

குமரியில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கிகளில் கூலியை உயர்த்தி வழங்கக்கோரி தொழிலாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாணிப கழக கிட்டங்கி

நாகர்கோவில் கோணத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கி உள்ளது. இங்கு மத்திய, மாநில அரசு ஒதுக்கீடு செய்யப்படும் ரேஷன் அரிசி மூடைகள் ஏற்றி இறக்குவதற்கு என 2 கிட்டங்கிகளிலும் 40 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் அரிசி ஒரு டன் ஏற்றினால் ரூ.120-ம், மாநில அரசு ஒதுக்கீடு அரிசிகளை ஏற்றும்போது ஒரு டன்னுக்கு ரூ.60-ம் ஊதியமாக வழங்கப்படுகிறது. இதைத்தவிர்த்து ஒரு டன் அரிசி ஏற்றும் போது நிர்வாக தரப்பில் ரூ.33 சம்பளமாக வழங்கப்படுகிறது.

திடீர் போராட்டம்

ஆனால், ஒப்பந்தம் எடுத்தவர்கள் ஒரு டன் ஏற்றுதற்கு 120-க்கு பதிலாக ரூ.90 மட்டுமே வழங்குவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் பணிக்கு வந்த தொழிலாளர்களை கிட்டங்கிக்குள் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தங்களுக்கு கூலியை ரூ.130 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கையும் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தால் கிட்டங்கியில் இருந்து பொருட்கள் வெளியே செல்லவில்லை. இதையடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி விமலா ராணி தலைமையில் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்பட்டது. இதையடுத்து தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு சென்றனர்.

திங்கள்சந்தை, காப்புக்காடு...

இதேபோல் திங்கள்சந்தை கிட்டங்கியில் நேற்று காலையில் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வெளி ஆட்கள் மூலம் அரிசி மூடைகளை இறக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூலியை உயர்த்தி வழங்கக்கோரியும் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா.

இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமை தூக்கும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் லாரி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

காப்புக்காடு உள்ள வாணிப கழக கிட்டங்கியிலும் நேற்று தொழிலாளர்கள் கூலியை உயர்த்தி வழங்கக்கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com