

சென்னை,
சென்னை பெரம்பூர் தொகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பெருநகர சென்னை மாநகராட்சி, பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி இணை ஆணையாளர்(பணிகள்) சரவணன் இன்று (10.08.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இணை ஆணையாளர், பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தினைப் பார்வையிட்டு, அங்கு செயல்பட்டு வரும் இ-சேவை மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அங்கு மனு அளிக்க வருகைத் தரும் மக்களிடம் கலந்துரையாடி, மக்களுக்கான தேவைகளை விரைந்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் கலை கல்லூரியில் நிர்வாகக் கட்டிடம், கலையரங்கம், நூலகத்துடன் கூடிய அறிவுசார் மையம், கிரிக்கெட் பயிற்சி வலை, கைப்பந்து உள்ளிட்ட ஒருங்கிணைந்த விளையாட்டு வசதிகள் அமைப்பது குறித்துப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், பிவி காலனியில் உள்ள காலி இடத்தினைப் பார்வையிட்டு, அங்கு பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலான கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாகவும், வார்டு-46க்குட்பட்ட குட் செட் குளத்தில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாகவும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ச்சியாக, வார்டு-37க்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் முல்லை மற்றும் வசந்தம் காம்ப்ளெக்ஸ் அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடம் சிதிலமடைந்துள்ளதைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடாக விபத்துகள் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.