உலக செஸ் சாம்பியன்ஷிப்; தமிழக வீரர் குகேஷ் வெற்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


உலக செஸ் சாம்பியன்ஷிப்; தமிழக வீரர் குகேஷ் வெற்றி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Dec 2024 7:30 PM IST (Updated: 13 Dec 2024 12:59 PM IST)
t-max-icont-min-icon

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு வாழ்த்துகள். உங்களது குறிப்பிடத்தக்க சாதனை இந்தியாவின் செஸ் பாரம்பரியத்தைத் தொடர்வதோடு, மற்றொரு உலகத் தரம் வாய்ந்த சாம்பியனை உருவாக்கி சென்னையை உலக செஸ் தலைநகராக உறுதிப்படுத்த உதவுகிறது. உங்களை நினைத்து தமிழகம் பெருமை கொள்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் தமிழக துணை முதல்-அமைச்சரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ல் சாம்பியனாக உருவெடுத்த நமது கிராண்ட்மாஸ்டர் குகேஷுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

SDAT-இன் ELITE பிளேயர்ஸ் திட்டத்தில் புகழ்பெற்ற வீரரான குகேஷ், சர்வதேச செஸ் போட்டிகளில் நிலையான வெற்றிகளை தொடர்ந்து தாயகத்திற்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். அவரது வெற்றி நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு இளம் வயதிலேயே இப்படிப்பட்ட அசாதாரண திறமையை காண்பது உண்மையிலேயே உத்வேகம் அளிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story