சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்ற கூட்டம் - முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்

முதல்-அமைச்சரின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உலக பொருளாதார மன்ற கூட்டம் - முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கிறார்
Published on: 

சென்னை,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டியிட்டு வரும் சூழலில், எதிர்காலத்தில் வேகமாக வளரக்கூடிய தொழில் துறைகளுக்கான முக்கிய மையமாக தமிழகத்தை நிலைநிறுத்த அரசு முயன்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22 தேதி வரை நடைபெறவுள்ள உலகப்பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச முதலீடுகள்

இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சுவிட்சர்லாந்து செல்ல உள்ளார். தமிழகத்தை 1.5 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலக்குடன் அரசு செயல்பட்டு வரும் நிலையில், டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பது சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதற்கான முக்கிய வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தின் 57-வது ஆண்டு கூட்டமான இந்த மாநாட்டில், உலகின் முக்கிய அரசியல் தலைவர் தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசுப் பிரதிநிதிகள், 1,000-க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள், சுல்வியாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகத்தினரும் இதில் கலந்து கொள்வார்கள்.

முதல்-அமைச்சருக்கு அழைப்பு

உலகப்பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோர் விடுத்துள்ள அழைப்பை ஏற்று இந்த மாநாட்டில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இதுவரை தமிழகத்தின் சார்பில் பெரும்பாலும் தொழில்துறை அமைச்சர்களே டாவோஸ் மாநாட்டில் பங்கேற்று வந்த நிலையில், முதல்-அமைச்சரே நேரடியாகக் கலந்து கொள்ளத் திட்டமிடுவது கவனம் பெற்றுள்ளது.

டாவோஸ் மாநாட்டில் உலகளாவிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்திப்பதன் மூலம், தமிழகத்தின் தொழில் கட்டமைப்பு, முதலீட்டுக்கான வாய்ப்புகள் மற்றும் அரசின் கொள்கைகள் குறித்து சர்வதேச அளவில் எடுத்துரைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

X