உலக சுற்றுச்சூழல் தினம்: சென்னையில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது

சென்னை மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக, இன்று 2900 மரக்கன்றுகள் நடப்பட்டது.
உலக சுற்றுச்சூழல் தினம்: சென்னையில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

2900 மரக்கன்றுகள் நடப்பட்டது

உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் பூங்காக்கள், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள், பள்ளி வளாகங்கள், திறந்தவெளி பகுதிகள், நீர்நிலைப் பகுதிகள், குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனை வளாகங்கள், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வளாகப் பகுதிகள், விளையாட்டுத் திடல்கள், மயானபூமிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் முதற்கட்டமாக, 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு, அதில் இன்று 2900 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, மேயர் ஆர்.பிரியா, துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட பிரகாசம் சாலையில் உள்ள ஸ்ரீராமுலு பூங்காவில் மரக்கன்றுகளை நட்டனர்.

உலக சுற்றுச்சூழல் தினம்

திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-75, ஓட்டேரி லிங்க் சாலையில் உள்ள மூலிகை பூங்கா வளாகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரனும், சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-199, சத்தியவாணி முத்து தெருவில் உள்ள மாநகராட்சி நீருறிஞ்சும் பூங்காவில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பி.சரவணனும், பட்டாளம் பகுதியில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் இணை ஆணையாளர் (கல்வி) க.கற்பகம், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், மாணவ, மாணவியருடன் கலந்துரையாடி மரக்கன்றுகளை நட்டனர். மேலும், 1 முதல் 15 வரையிலான மண்டலங்களில் மக்கள் பிரதிநிதிகள், மண்டல அலுவலர்கள், மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும், உலக சுற்றுச்சூழல் தினம் குறித்த விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வுகளில் மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர். கௌஷிக், மக்கள் பிரதிநிதிகள், தலைமைப் பொறியாளர் சி.ஏ.பாலமுரளி, கண்காணிப்புப் பொறியாளர் திருமுருகன், மண்டல அலுவலர்கள் சி.விஜய்பாபு, ஜி.சொக்கலிங்கம், வரதராஜன், மண்டல செயற்பொறியாளர் ஆர்.சரவணன், மற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com