

சென்னை,
சத்குருவின் ‘மண் காப்போம் - காவேரி கூக்குரல்’ இயக்கம் மூலம் இந்த ஆண்டு (2026-27) 1.2 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இதன் துவக்க விழா இன்று (05/06/2026) தமிழகம் மற்றும் புதுவையில் 140-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.
சென்னையில் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், சைதை எம்எல்ஏ அருள் பிரகாசம், திரைப்பட தயாரிப்பாளர், இசைக்கலைஞர் ஷோபா சந்திரசேகர் மற்றும் லான்சன் குழுமத்தலைவர் லங்கா லிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு பணிகளைத் துவக்கி வைத்தனர். புதுவையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ரங்கசாமி மரம் நடும் பணிகளைத் துவக்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் பேசுகையில், “நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமெனில் சுற்றுச்சூழல் அவசியம் என்பதை ஈஷா தன்னுடைய செயல்பாட்டின் மூலமாக மக்களுக்கு தெரிவிக்கிறது. உள்நிலை மாற்றத்தை வளர்ப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஈஷா யோகா மையம், அதைத் தாண்டி உலகச் சுற்றுச்சூழல் தினத்தைக் கொண்டாடுவதும், காவிரி கூக்குரல் போன்ற இயக்கங்கள் மூலம் மரவளர்ப்பை முன்னெடுப்பதும் மிக பொருத்தமானதாக இருக்கிறது.
நம் தமிழ்நாட்டில் அனைத்து வளங்களும் இருக்கின்றன. வனவளம் போன்றவை வளர்ந்தால் மழைப் பொழிவு அதிகமாகி விவசாய உற்பத்தி பெருக வழிவகுக்கும், இதற்கேற்ப, முதலமைச்சர் கனிமவளக் கொள்ளைகளைத் தடுத்து நிறுத்த, இயற்கை வளங்களைப் பேணி காக்க அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். வரும் 2031-ஆம் ஆண்டுக்குள் காடுகளின் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த உறுதியேற்று இருக்கிறார். சாயப்பட்டறை கழிவுகள் நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்கவும், காற்று மாசுபடுவதைத் தவிர்க்கவும், ஆற்றங்கரைகளில் பசுமைப் பூங்காக்கள் அமைக்கவும், சதுப்பு நிலக் காடுகளைப் பாதுகாக்கவும், கூவம் நதியை மீட்டெடுக்கவும் முதல்வர் சிறப்பான திட்டங்களைத் தீட்டி, தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு வருகிறார்.” எனக் கூறினார்.
இவ்விழாவில் ஷோபா சந்திரசேகர் பேசுகையில், “இந்த விழாவில் மனிதர்களைப் பற்றிப் பேசாமல், மண்ணையும், மரத்தையும் பற்றி பேசவும், அவற்றிற்கு நன்றி செலுத்தவுமே கூடியிருக்கிறோம். 'மண்ணு மாதிரி இருக்கியே', 'மரமண்டையா இருக்கியே' என்று மனிதர்களைத் திட்டுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். மண்ணையும் மரத்தையும் போல நாம் பிறருக்குப் பயனுள்ளதாக வாழ்ந்தாலே போதுமானது.
மரங்கள் என்பவை 'வானத்தை நோக்கிப் பூமி எழுதிய கவிதைகள்' என்று கவிஞர் கலீல் ஜிப்ரான் எழுதியுள்ளார். உண்மைதான், இங்கு இருக்கின்ற மரங்களை எல்லாம் பாருங்கள். அவை வானத்தை நோக்கி உயர்ந்து எழுதிய கவிதை போல இருக்கின்றன. அந்த அற்புதமான கவிதையை அழிக்கவோ அல்லது சாய்க்கவோ நமக்கு எந்த உரிமையும் கிடையாது. மண் காப்போம் இயக்கத்தை உருவாக்கி, உலக அளவிலான விழிப்புணர்வையும் சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்ட சத்குருவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
'மண் காப்போம் - காவேரி கூக்குரல்' இயக்கம் இதுவரை 13.4 கோடி மரங்களை விவசாய நிலங்களில் நட்டு, 2.6 லட்சம் விவசாயிகளை மரம் சார்ந்த விவசாயத்திற்கு மாறச் செய்து உலக சாதனை படைத்துள்ளது. கடலூரில் உள்ள காவேரி கூக்குரல் நாற்றுப்பண்ணை ஆண்டுக்குச் சுமார் 85 லட்சம் மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது ஆசியாவின் மிகப்பெரிய நாற்றுப்பண்ணைகளில் ஒன்றாகவும், முழுமையாகப் பெண்களால் நிர்வகிக்கப்படும் மிகப்பெரிய பண்ணையாகவும் திகழ்கிறது. இதனை சாத்தியமாக்கும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துகள்” எனக் கூறினார்.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 1,00,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் விவசாய நிலங்களில் நடப்பட்டு, மொத்தம் 317 ஏக்கர் பரப்பளவில் மரம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ளும் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழகத்தில் மாவட்டவாரியாக நடைபெற்ற விழாக்களில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
‘பருவநிலைக்காக, நமது எதிர்காலத்திற்காக இயற்கையிலிருந்து உத்வேகம் பெறுவோம்’ என்ற ஐநா-வின் இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருளை மையமாகக் கொண்டு, இந்த மாபெரும் மரம் நடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
சத்குருவின் வழிகாட்டுதலில் துவங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் காவேரி நதியைப் புத்துயிர் பெறச் செய்வதோடு, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில், காவேரி வடிநிலப் பகுதிகளில் மரம் சார்ந்த விவசாயத்த ஊக்குவித்து வருகிறது. காவிரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் 2.6 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறியுள்ளனர். மேலும் இவ்வியக்கம், ஐநாவின் பாலைவனமாதலைத் தடுக்கும் அமைப்பு (UNCCD) மற்றும் ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தால் (UNEP) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மரம் சார்ந்த விவசாயத்தில், பயிர்களுடன் பொருளாதார மதிப்புள்ள மரங்களும் வளர்க்கப்படுகின்றன. இந்த விவசாய முறையால் மண் வளம், நதிநீர் வளம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயிகளின் வருமானம் ஒரே நேரத்தில் மேம்படுவதால் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.