உலக புத்தொழில் மாநாடு முன்னேற்பாட்டு பணிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு


உலக புத்தொழில் மாநாடு முன்னேற்பாட்டு பணிகள்- அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு
x

இதுவரை 10,000 நபர்கள் மாநாட்டில் பங்குகொள்ள ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

உலக புத்தொழில் மாநாடு 2025 முன்னேற்பாட்டு பணிகளை தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் ஸ்டார்ட்அப் தமிழ்நாடு நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு ஸ்டார்ப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக அடுத்த மாதம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு 2025 கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநாட்டினை தொடங்கிவைக்க உள்ளார்.

இந்த மாநாட்டு பணிகள் தொடர்பாக இன்று (8.9.2025) சென்னை, நந்தனம், மெட்ரோ ரெயில் வளாகத்தில் உள்ள ஸ்டார்ட்அப் தமிழ்நாடு தலைமை அலுவலத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, அடுத்தமாதம் அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மாநாடு நடத்தப்படவுள்ளது.

இந்த மாநாட்டில், உலகநாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், புத்தொழில் செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள், புத்தொழில் மற்றும் புத்தாக்கம் சார்ந்து செயல்படும் 10 மத்திய அரசுத்துறைகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு மாநில அரசுத் துறைகள், 9 பிற மாநில புத்தொழில் இயக்கங்கள் ,10-க்கும் மேற்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் தற்போது வரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனை மேலும் அதிகப்படுத்த வேண்டும். உலகநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு தங்கும் இடம், உணவு, போக்குவரத்து ஆகிவற்றை ஏற்பாடு செய்ய வேண்டும். அரசுத் துறை அனுமதிகளை உரிய நேரத்தில் பெற்று வழங்க வேண்டும். இம்மாநாட்டில் அமைக்கப்படும் கண்காட்சியில் 750 அரங்குகள் முழுவதும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

முக்கியமாக, பள்ளி மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து அரங்குகள் ஒதுக்கப்பட வேண்டும். எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு தேவையான ஏ.ஐ. தொழில்நுட்பம், ஏரோ ஸ்பேஸ், பயோடெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ் போன்ற துறைகளின் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான அறிவியல் தொழில்நுட்பங்கள் பெறும் வகையிலும் நம்முடைய தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லும் வகையில் இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திட தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை 10,000 நபர்கள் மாநாட்டில் பங்குகொள்ள ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். மாநாட்டில் குறைந்தபட்சம் 30,000 தொழில்முனைவோர்கள் கலந்து கொள்ளும் வகையில் மாநாடு நடைபெறுவது தொடர்பான விளம்பரங்களை நாளிதழ்கள், பருவஇதழ்கள், தொலைகாட்சி, எஃப்எம், சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு முன், தமிழ்நாடு SC-ST புத்தொழில் நிதி திட்டத்தின் கீழ் 3 நிறுவனங்களுக்கு ரூ. 4 கோடியே 40 லட்சத்திற்கான மானியத்தினை பங்குத் தொகையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல் ஆனந்த், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மற்றும் மாநாட்டு குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story