உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாநாட்டில் தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை, 

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார முன்னேற்றத்தை பெற்றிருக்கும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதற்கேற்ற வகையில் தொழில் முதலீடுகளை ஈர்க்க கடந்த 2 ஆண்டுகளாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திற்கு உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டின் அதிகாரபூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் உள்ளன. 2 நாட்கள் மாநாட்டில் 26 அமர்வுகளில் 170-க்கும் மேற்பட்ட உலக புகழ் வாய்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள்.

மேலும் இந்த மாநாட்டில் தொழில்துறை சார்ந்த முதலீடுகளுக்கான பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொழில் வழிகாட்டி மையம் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் இந்த மாநாட்டில், மோட்டார் வாகனங்கள், ஜவுளி, காலணி தொழில்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், வேளாண்மை தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் முக்கிய இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மேலும் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஷ் கோயல் தலைமை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com