ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சி; முதல்-அமைச்சர் பேச்சு

ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தா.
ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அரசு முயற்சி; முதல்-அமைச்சர் பேச்சு
Published on

சென்னை,

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனம், சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. அதன் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா, கடந்த பிப்ரவரியில் தனது எரிசக்தி திட்டத்தை சென்னையில் தொடங்கியது. தற்போது அந்த நிறுவனம், சென்னை, போரூரில் ஒரு உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை அமைத்துள்ளது. அங்கு ஒரு பிரத்யேக ஆய்வகமும் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் எரிசக்தித் துறையில் முனைவர் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் பெற்ற 2,500 தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. போரூரில் உள்ள இந்த உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாணவ, மாணவிகளுக்கு அந்நிறுவனத்தில் உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புக்கான பயிற்சி பெறுவதற்கு அனுமதி கடிதங்களையும் அவர் வழங்கினார்.

எனக்கும் பெருமை

இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-

உலகில் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமமாகவும், பல்வேறு தொழில் உற்பத்தி மையங்களைக் கொண்டதுமான இந்த ஹிட்டாச்சி நிறுவனம், தனது உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத்தை சென்னையில் தொடக்க இருக்கும் செய்தி, இந்த ஆட்சிக்கும், எனக்கும் பெருமை தருகிறது.

முதலீடுகளை ஈர்க்க முயற்சி

பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மாநிலத்தின் பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பெருளாதார வல்லுனர்களுடன் கலந்தாலோசனைகள் மேற்கொண்டு எங்களது அரசு பல்லேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகளுடன் துறை சார்ந்த தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான உலகளாவிய திறன் மையங்கள் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டுகளாக 30-க்கும் மேற்பட்ட உலகளாவிய திறன் மையங்கள் தமது புதிய நிறுவனங்களையோ அல்லது விரிவாக்கத் திட்டங்களையோ இங்கு நிறுவியுள்ளன. தமிழ்நாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் நல்ல வளர்ச்சி பெற்று வருவது பெருமை அளிக்கக்கூடிய ஒன்று.

பொருளாதார வளர்ச்சி

இந்த வேகத்தில் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதை காணும்போது, 2030-ம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பொருளாதார மாநிலம் என்ற எங்கள் இலக்கை அடையும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்ற நம்பிக்கையை அளிக்கிறது. ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின் கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில் நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளன.

எரிசக்தித் துறையில், நிபுணத்துவம் பெற்ற மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்ட உயர்தர வேலைவாய்ப்புகளை உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையத் திட்டம் வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக இளைஞர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கு, அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிக்க நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு

பிரான்ஸ் நாட்டின் தசோ சிஸ்டம், ஜெர்மனியின் சீமென்ஸ் மற்றும் அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான ஜி.இ.ஏவியேஷன் உடன் இணைந்து, மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையங்கள், தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்த வசதி வாய்ப்புகளை அனைத்துத் தொழில் நிறுவனங்களும் பயன்படுத்தி தங்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் ஜனவரியில் நடத்த இருக்கிறோம். உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வர இருக்கின்றன. உங்களைப் போன்ற நிறுவனங்களுடன் இணைந்துதான் முதலீட்டாளர் மாநாட்டை நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் கணபதி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண்ராய், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் விஷ்ணு, ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கிளாடியோ பாச்சின், ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் வேணு, தலைமை தொழில்நுட்ப அலுவலர் உர்ஸ் டோக்வில்லர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com