

சென்னை,
சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியினை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஏற்றுக்கொண்டனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று (31.05.2026) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், தலைமையில், தியாகராய நகர் கிரியப்பா சாலையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு, புகையிலை பயன்பாட்டிற்கு எதிரான உறுதி மொழியினை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்வில், மாநகர நல அலுவலர் டாக்டர் ஜெகதீசன், பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ், மாவட்ட மனநல மருத்துவர் லட்சுமி, கூடுதல் நகர் நல அலுவலர் சுகன்யாதேவி, மண்டல நல அலுவலர் ஆஷாலதா, மண்டல அலுவலர் பானுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
உலகில் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் புகையிலையால் இறக்கிறார்கள். இதில் 12 லட்சம் பேர் புகைப்பிடிக்காமலே மற்றவர் புகையால் பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டில் NFHS 6 ஆய்வின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 17.7 சதவீதத்தினர் ஏதேனும் ஒரு வகையான புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்; பெண்களிடையே இந்த விகிதம் 4.8 சதவீதமாக உள்ளது
ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 50 சதவீதத்திற்கும், பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 20 சதவீதத்திற்கும் புகையிலையே காரணமாக அமைகிறது.
புகைபிடிக்காதவர்களுடன் ஒப்பிடுகையில் புகைபிடிப்பவர்களுக்கு Premature death மரணத்திற்கான ஆபத்து 31 % முதல் 55 % வரை அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் உலக புகையிலை இல்லா தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது குறித்து அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் புகையிலைபொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் பணிபுரிந்து வரும் கோட்ட சுகாதார ஆய்வாளர்கள் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள், மால்கள் மற்றும் விழாக்கள் நடைபெறும் இடங்கள், கல்லூரி வளாகங்கள், பள்ளி வளாகங்கள், உணவு விடுதிகள், தேநீர் மற்றும் சிற்றுண்டி நிலையங்கள், பொது விநியோக கடைகளில் சுகாதார கல்வி பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
மண்டலம் 1 முதல் 15 வரை உள்ள கோட்டங்களில் பணிபுரிந்து வரும் துப்புரவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலக உரிமையாளர்களுக்கு ரூ.200/- அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் கல்லூரி, பள்ளி வளாகங்களை சுற்றி 100 மீட்டர் தொலைவில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்லூரி, பள்ளி வளாகத்தின் முன்புறத்தில் "புகையிலை தடை செய்யப்பட்ட பகுதி" என்ற வாசகம் அடங்கிய அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 200 கோட்டங்களிலும் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் தினந்தோறும் புகையிலை விற்பனை செய்யும் இடங்களுக்கு கள ஆய்வு மேற்கொண்டதில் ஏப்ரல் 2025 முதல் 2026 ஆம் ஆண்டு மே மாதம் வரை ரூ.1,55,900- வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார ஆய்வாளர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அலுவலர்களுடன் இணைந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களுக்கு கூட்டாய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தும் அபராத தொகையும் விதிக்கின்றனர்.
பொதுமக்கள் தமக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் புகையிலையின் தீய விளைவுகளைத் தவிர்க்கும் பொருட்டு, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.