தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க சொல்வதா? கவர்னருக்கு வைகோ கண்டனம்

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கவர்னர் ஆர்.என்.ரவி தனது கருத்தை திரும்பப்பெற வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க சொல்வதா? கவர்னருக்கு வைகோ கண்டனம்
Published on

சென்னை,

கவர்னர் மாளிகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும்வகையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கும் கருத்துகள் விஷமத்தனமானவை. 'தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றுக்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு செயல்திட்டம் இருந்தால், அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட, தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்' என்று கவர்னர் பேசியிருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று சொல்வதற்கு கவர்னருக்கு எந்த அருகதையும் இல்லை. எல்லாவற்றையும் திட்டமிட்டு, ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவா சனாதனக் கும்பல் போட்டுத் தந்த தடத்தில் நின்றுதான் கவர்னர் பேசிக்கொண்டு இருக்கிறார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு நடைபெற்ற போராட்ட வரலாறு கவர்னருக்கு தெரிவதற்கு வாய்ப்பு இல்லை.

ரத்தநாளங்களில்...

தமிழ்நாடு என பெயர் சூட்டக் கோரி விடுதலைப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர்த் தியாகம் செய்த வரலாறை இவர் அறிந்திருப்பாரா? 1967-ல் அண்ணா முதல்வர் ஆனவுடன், சென்னை மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக் கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றினார்.

தொலைநோக்கோடு அண்ணா சூட்டிய பெயர், தமிழ் இலக்கியங்களிலே இடம்பெற்றுள்ளது. தமிழ்நாடு என்றால், தமிழ் மொழியை நாடு, தமிழரை நாடு, தமிழ்ப் பண்பாட்டை நாடு என்று பொருள்படும். இது வெறும் பெயர் மட்டும் அல்ல, கோடானு கோடி தமிழ் மக்களின் ரத்த நாளங்களில் கலந்திருக்கின்ற தமிழ் உணர்வுதான் 'தமிழ்நாடு' என்று மலர்ந்தது.

திரும்பப்பெற வேண்டும்

கவர்னர் ஆர்.என்.ரவி எல்லை மீறி பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. திராவிட இயக்கம் பற்றிய அவரது விமர்சனங்கள், அவர் பா.ஜ.க. வின் நிழல் தலைவர் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது. 'தமிழ்நாடு' பெயரை மாற்றி அழைக்க வேண்டும் என்று கூறிய கருத்தை அவர் உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இல்லையேல் நாகலாந்து மக்கள் வழியில் தமிழ்நாட்டு மக்களும் பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com