10-ம் வகுப்பு பாடத்தில் எட்டயபுரம் அரசர் குறித்து தவறான வரலாறு: திருத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எட்டயபுரம் அரசர் துரோகம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளதை தமிழ்நாடு அரசு திருத்த வேண்டும் என வலியுறுத்தி எட்டயபுரத்தில் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் ராஜா தலைமையில் பேருந்து நிலையம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உமறுப்புலவர் சங்கத் தலைவர் காஜாமைதீன் முன்னிலை வகித்தார். எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42-வது மன்னர் ராஜ ஜெகவீரமுத்து தங்க குமாரராம வெங்கடேஸ்வர எட்டப்ப நாயக்கர் அய்யன் சந்திர சைதன்ய ராஜா பங்கேற்று, எட்டயபுரம் சமஸ்தானம் இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்த சிறப்பு வாய்ந்த மிகப்பெரிய சமஸ்தானம் என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், எட்டயபுரம் வர்த்தகர்கள் சங்கம், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, உமறுப்புலவர் ஜமாத் நிர்வாகம், அனைத்து சமுதாய தலைவர்கள், பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






