நேற்று... இன்று... நாளை யாரோ? - உதயகுமாருக்கு ரவீந்திரநாத் கேள்வி

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
நேற்று... இன்று... நாளை யாரோ? - உதயகுமாருக்கு ரவீந்திரநாத் கேள்வி
Published on

சென்னை,

கடந்த சில தினங்களாக அதிமுக விவகாரம் தமிழக அரசியலில் விவாதப்பொருளாக மாறி உள்ளது. ஓரிரு தினங்களுக்கு முன் அவினாசி-அத்திகடவு திட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் முன்னாள் -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொள்ளாததும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் விவாதத்தினைக் கிளப்பியது. இது ஒருபுறம் இருக்க நேற்று, அதிமுக உட்கட்சி விவகாரத்தினை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது. நேற்று மாலை கோபி செட்டி பாளையத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் செங்கோட்டையன், "கட்சி ஒன்றாக இருக்க வேண்டுமென நினைத்தவன். என்னை சோதித்துப் பார்க்க வேண்டாம்" எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சித் துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோவொன்றை வெளியிட்டு அதில்,

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அ.தி.மு.க.வை மீட்டெடுத்து இயக்கத்தை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. அமைதி வளம் வளர்ச்சி என்று தாரக மந்திரத்தோடு உழைத்த ஜெயலலிதாவின் மறுவடிவமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்காக மாபெரும் தியாக வேள்வியை நடத்திக் கொண்டிருக்கிறார். இது சோதனை என்று யாரும் சொல்ல வேண்டாம். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உழைத்துக் கொண்டு இருக்கிறார் என அதில் கூறினார்.

இந்தநிலையில், ஆர்.பி.உதயகுமாரிடம் கேள்வி எழுப்பி இது குறித்து ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில்,

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்... இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிச்சாமி... நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com