

சென்னை,
தமிழகத்தில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மின்சாரம் அனல் மின்சார உற்பத்தி நிலையம், நீர், கியாஸ் மற்றும் அணுமின்சார நிலையம், சீசன் காலங்களில் காற்றாலை, சூரிய சக்தி மூலமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
மத்திய தொகுப்பில் இருந்து சராசரியாக 6 ஆயி ரத்து 500 மெகாவாட் மின்சாரமும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு வழக்கமாக 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த தினசரி மின்சார தேவை, கோடை காரணமாக 21 ஆயிரம் மெகாவாட் வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடுத்த மாதம் மே மாதம் எட்டக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நேற்றைய (28-ந்தேதி) மின் தேவை 21,211 மெகாவாட்டாக இருந்ததாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். அனல் மின் நிலையம், காற்றாலை, சோலார் வாயிலாக நேற்று 6,915 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மத்திய தொகுப்பு மற்றும் தனியாரிடம் இருந்து 14,296 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் வாங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் 462.76 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது மின்சாரத்தின் தேவை 19 ஆயிரத்து 679 மெகா வாட்டிலிருந்து 19 ஆயிரத்து 822 மெகாவாட்டாக மிதமாக உயர்ந்துள்ளது. தற்போது கோடை வெயில் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாலும், தொழில்துறை வளர்ச்சியாலும், அடுத்த மாதங்களில் (மே மாதம்) மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மின்சார துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மே மாதத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி தொடங்குவதால், மின்சார தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும், இது தவறான தகவல் என்றும் சில தரப்பில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அக்னி நட்சத்திர காலத்தில் மின்சாரத்தின் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால், மின்சார வெட்டு தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.