விளைச்சல் பாதிப்பு: பிஸ்தா பருப்பு விலை கிடுகிடு உயர்வு

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிஸ்தாவின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

முந்திரி, பாதாம் உலர் பருப்பு வகைகள் வரிசையில் பிஸ்தாவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதில், புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றது. பிஸ்தா பருப்பு சாப்பிடுவது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையை நிர்வகிக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

பிஸ்தா பருப்பு உற்பத்தியில் அமெரிக்கா முதல் இடம் வகிக்கிறது. உலக சந்தைக்கு தேவையான 65 முதல் 70 சதவீதம் அளவுக்கு இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது இடத்தில் ஈரான் உள்ளது. ஈரானில் கடந்த ஆண்டில் எதிர்பார்த்ததைவிட குறைவான விளைச்சல் இருந்ததால், உலக சந்தையில் பிஸ்தா விற்பனை வெகுவாக குறைந்தது. அதே நேரத்தில், ஐஸ்கிரீம், சாக்லேட், ஆரோக்கிய பானங்கள் போன்றவை தயாரிப்பில் பிஸ்தா அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், அதன் தேவையும் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் பிஸ்தாவின் விலை கிட்டத்தட்ட 30 சதவீதம் உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் பிஸ்தா விலை ஒரு கிலோ ரூ.938 ஆக உயர்ந்தது. 2018-ம் ஆண்டுக்கு பிறகு அதிக விலை உயர்வு இதுதான். பிஸ்தா பருப்பு தரத்தை பொறுத்து ரூ.700 முதல் ரூ.2,200 வரை விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிஸ்தா பற்றாக்குறை தொடர்ந்தால், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் விலையை மேலும் உயர்த்தலாம் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com