

தமிழ்நாடு மாநில யோகா விளையாட்டு சங்கம், திண்டுக்கல் மாவட்ட யோகா விளையாட்டு சங்கம் சார்பில் பழனியில் மாநில அளவிலான யோகா போட்டி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு யோகா சங்க பொருளாளர் கரிகாலன் தலைமை தாங்கினார். பழனி முருகன் கோவில் இணை ஆணையர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
போட்டியில் திண்டுக்கல், தேனி, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த போட்டியானது ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடைபெற்றது. அப்போது பல்வேறு யோகாசனங்களை செய்து மாணவ-மாணவிகள் அசத்தினர். முடிவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இதில், பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு கவுரவ தலைவர் ஹரிகரமுத்து, தலைவர் ஜே.பி.சரவணன், வள்ளுவர் தியேட்டர் உரிமையாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பரிசு வழங்கினர்.