கொடுக்கிறதுதான் கொடுக்கிறீர்கள்... இன்னோவா கார் கொடுங்கள்: எம்.எல்.ஏ. சண்முகன் கோரிக்கை

அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகிய மூன்றின் அடிப்படையில் தமிழ்நாட்டை தாங்கி பிடிக்கின்ற முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ. சண்முகன்
Published on

சென்னை

தமிழக சட்டசபையில் இன்று பேசிய த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன், உறுப்பினர்களுக்கு இன்னோவா கார் கொடுக்கும்படி கோரிக்கையாக கேட்டு கொண்டார்.

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தில் நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டுத்துறை ஆகிய துறைகள் மீதான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.

எம்.எல்.ஏ.க்களுக்கு கார்

அப்போது அவர், எம்.எல்.ஏ.க்கள் தங்களது மக்கள் பணியை தொய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதிப்பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கும் வசதியாக, அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்று கூறினார். இதன்படி, சட்டசபைக்கு சென்று வர, தொதிப்பணியாற்ற வசதியாக கார் வழங்கப்பட உள்ளது.

அதனுடன், எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு உதவியாளர்களை நியமிக்க மாதம் ரூ.25 ஆயிரம் படி வழங்கப்படும். ஓட்டுநர், வாகன பராமரிப்பு, எரிபொருளுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் படி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த அறிவிப்புக்கு த.வெ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரவேற்பு தெரிவித்து பேசினர்.

எம்.எல்.ஏ. சண்முகன்

இதனை தொடர்ந்து த.வெ.க. எம்.எல்.ஏ. சண்முகன் எழுந்து பேசும்போது, எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்து முதல்-அமைச்சர் அமர்ந்திருக்கிறார். கோரிக்கையில் நியாயம் உள்ளது என்றால், அது மக்களோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ, யாரிடம் இருந்து வந்த கோரிக்கையானாலும் உடனடியாக அது நிறைவேற்றப்படும் என்று மீண்டும் ஒருமுறை நம்முடைய முதல்-அமைச்சர் நிரூபித்து இருக்கிறார்.

அறம், நேர்மை, மக்கள் நலன் ஆகிய மூன்றின் அடிப்படையில் தமிழ்நாட்டை தாங்கி பிடிக்கின்ற முதல்-அமைச்சர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்ற பெருமையோடு அவருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, கொடுக்கிற காரை இன்னோவா காராக கொடுத்தால் நன்றாக இருக்கும் என பின்னால் இருக்கின்ற உறுப்பினர்கள் கூறுகிறார்கள் என்று கூறியதும் முதல்-அமைச்சர், உறுப்பினர்கள் உள்பட அனைவரிடம் இருந்தும் பலத்த சிரிப்பலை எழுந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com