விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள் - லெப்டினன்ட் ஜெனரல் அருண்

குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் என்று லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார்.
விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள் - லெப்டினன்ட் ஜெனரல் அருண்
Published on

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பாசத்திரம் மலைப்பகுதியில் கடந்த 8ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான உடனே அப்பகுதிக்கு விரைந்து சென்று மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு படை வீரர்கள், ராணுவத்தினர் வருவதற்கு முன்பாகவே மக்கள் அங்கு சென்று உதவினர்.

இதனைத்தொடர்ந்து சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு விரைந்தார். மீட்பு பணி, வேண்டிய உதவியை உடனடியாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் 13 பேரின் உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அவர்களது உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்பட்டது.

இதனிடையே ஹெலிகாப்டரில் இருந்த குரூப் கேப்டன் வருண் சிங் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விமானப் படை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வருண் சிங்குக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தாலும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம் என்று லெப்டினன்ட் ஜெனரல் அருண் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மைதானத்தில் மீட்பு பணியில் திறம்பட செயல்பட்ட அரசுத்துறை மற்றும் உதவிய மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண், விபத்து நடந்த 10ஆவது நிமிடத்தில் விரைந்து வந்து மக்கள் உதவிசெய்தனர். விபத்து நடந்த பகுதியில் வசித்த மக்கள் நெருப்பை அனைத்து மீட்பு பணிக்கு பெரிதும் உதவினர். ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியின் போது அனைவரும் உதவினர், உதவாதவர்கள் யாருமில்லை. இப்படிப்பட்ட குடிமக்கள் இருந்தால் இதே ராணுவ உடை அணிந்து 5,000 முறை கூட பணியாற்றுவோம். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களை விரைந்து மீட்க உதவிய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்களுக்கு நன்றி.

நஞ்சப்பசத்திரம் மக்களின் உதவிக்கு கைமாறாக ஒராண்டு முழுவதும் மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். அடுத்த ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி வரை, ஒவ்வொரு மாதமும், ஒரு மருத்துவர், செவிலியர் மூலம் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்படும். விபத்தில் சிக்கிய 14 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நீங்கள் தான் கடவுள். குரூப் கேப்டன் வருண் சிங் தற்போது உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் தான் காரணம்.

அனைத்து துறைகளுக்கும் நன்றி சொல்லும் அதே நேரத்தில் உங்களுக்கு நன்றி சொல்வது முக்கியம். ஹெலிகாப்டர் விழுந்து நெருப்பு பற்றி எரிந்தநிலையிலும் மீட்பு பணியை மேற்கொண்டீர்கள். உங்கள் வீட்டில் உள்ள பெட் ஷீட் உள்ளிட்ட பொருட்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டீர்கள்.

ஹெலிகாப்டர் விழுந்ததை முதலில் பார்த்தவருக்கு ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். நீங்கள் செய்த உதவி விலை மதிப்பற்றது, அதற்கு ஈடாக எதையும் தர முடியாது. என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

முன்னதாக விபத்தின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு சான்றிதழ் வழங்கி லெப்டினண்ட் ஜெனரல் அருண் கவுரவபடுத்தினார. தீயணைப்பு, காவல்துறை, வனத் துறை அதிகாரிகளையும் அழைத்து அவர்களுக்கு சால்வை போர்த்தி, பரிசு வழங்கினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com