

சென்னை,
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நாளை கூடுகிறது. இதில், தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த சூழலில், எதிர்பாராத அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தி.மு.க., தற்போது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தி.மு.க. தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதற்காக ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் இன்று மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச உள்ளனர். இதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, கர்நாடக முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று சென்னை வர உள்ளனர்.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சகோதரர் ஸ்டாலின் எப்போதுமே தமிழர்களுக்கு எதிரான சக்திகளை ஒரு பாறை போல உறுதியாக எதிர்த்து நின்றிருக்கிறார். தேசிய நலனுக்காகவும், தமிழக நலனுக்காகவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் பதிவுக்கு மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் பதிலளித்துள்ளார். அதில், “அரசியலமைப்பையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் தி.மு.க.வின் வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நாட்டின் நலன்களையும், நமது தமிழ் மக்களின் நலன்களையும் முதன்மையாகக் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம். இந்த பாதையில் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்லாமல் கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலினை சகோதரர் என்று அழைத்த ராகுல் காந்தியை விமர்சிக்கும் வகையில் தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பதிவில், “நீங்கள் குறிப்பிட்ட அந்த சகோதரரின் முதுகில்தான் வெட்கமே இல்லாமல் குத்தினீர்கள் மிஸ்டர் ராகுல்” என்று பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் இருந்தபோது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சகோதரர் என்று ராகுல் காந்தி அழைத்து வந்தார். ஆனால் கடந்த முறை மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பதிவில் அவரை சகோதரர் என்று ராகுல் காந்தி அழைக்காதது பேசுபொருளானது.
தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. உடனான கூட்டணியை காங்கிரஸ் முற்றிலுமாக முறித்துக் கொண்டு வெளியேறிய நிலையில், தற்போது மீண்டும் மு.க.ஸ்டாலினை சகோதரர் என்று குறிப்பிட்டு ராகுல் காந்தி பதிவு வெளியிட்டுள்ளார் என்பது கவனத்திற்குரியது.