

திருவள்ளூர்,
திருவள்ளூர் அருகே மது அருந்தியதால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் விஷம் அருந்திய காதல் தம்பதி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை காலை அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த பாஸ்கரின் மகன் யுவராஜ் (29). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா (22) என்பவரைக் காதலித்து, கடந்த 14.2.2025 அன்று திருமணம் செய்து கொண்டார்.
யுவராஜுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு யுவராஜ் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதைக் கண்டித்த அவரது தந்தை பாஸ்கர் மற்றும் மனைவி மஞ்சுளா ஆகியோரிடம் அவர் தகாத வார்த்தைகளால் பேசி, தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மஞ்சுளா, வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தைக் குடித்துள்ளார். இதையடுத்து, அவரது கணவர் யுவராஜும் விஷம் அருந்தியுள்ளார்.
விஷம் அருந்திய இருவரும் மயங்கி விழுந்ததைத் தொடர்ந்து, பாஸ்கர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்களை மீட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர், மேல் சிகிச்சைக்காக இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, திங்கள்கிழமை காலை இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியர் விஷம் அருந்தி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து யுவராஜின் தந்தை பாஸ்கர் அளித்த புகாரின் பேரில், திருவள்ளூர் கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.