ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள் - வைரலானதால் பரபரப்பு

சமூக வலைதளத்தில் இளம்பெண்களின் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது.
ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வெளியிட்ட இளம்பெண்கள் - வைரலானதால் பரபரப்பு
Published on

திருச்சி,

சமூக வலைதளங்களில் ரீல்ஸ் முலம் காணொலிகளை வெளியிடுவதை பெரும்பாலானோர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த காணொலிகளுக்கு சமூக வலைதளத்தில் அதிகமான லைக்குகள் கிடைப்பதால் பலர் ஆர்வமுடன் ரீல்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.

சினிமா பாடலுக்கு வித, விதமான உடைகளை அணிந்து நடனமாடுவது, சினிமாவில் வரும் நகைச்சுவை காட்சிகளை தத்ரூபமாக நடித்து ரீல்ஸ் வெளியிடுவது உள்பட புதுப்புது யுக்திகளை கையாண்டு பொதுமக்களை கவருகிறார்கள். இதனால் ரீல்ஸ் மோகம் பெரும்பாலானவர்களை ஆட்கொண்டு வருகிறது.

இந்தநிலையில் திருச்சியில் 3 இளம்பெண்கள் கோட்டை ரெயில் நிலையத்தில் நடனமாடி அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். மாதவன் நடித்த ஜே.ஜே. திரைப்படத்தில் நடிகை ரீமாசென் 'மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு நடனமாடி இருப்பார். அந்த பாடல் ரெயில் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும். இதேபோல் 3 இளம்பெண்களும் ஜீன்ஸ் மற்றும் கருப்பு பனியன் அணிந்தபடி ரெயில் நிற்பது போன்ற பின்னணியில் அதே பாடலுக்கு நடனமாடி அமர்களப்படுத்தியுள்ளனர்.

மேலும், அந்த பெண்கள் நடனமாடும் இடம் திருச்சி கோட்டை ரெயில் நிலையமாகும். தற்போது சமூக வலைதளத்தில் இளம்பெண்களின் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது. அரசு கட்டிடம் மற்றும் பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

குறிப்பாக பஸ் நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி பெற்றே நடத்தப்படும். ஆனால் இந்த இளம்பெண்கள் எந்தவித முன் அனுமதியும் இன்றி ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com