

கோவை,
ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 32). இவர் கோவையில் தங்கி இருந்து காந்திபுரத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வருகிறார். அதே ஜவுளிக்கடையில் கோவையை சேர்ந்த 20 வயதான மாற்றுத்திறனாளியும், அவருடைய தாயாரும் வேலை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் அவர் தனது தாயாருக்கு மதியம் உணவு கொண்டு வந்து கொடுத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மகேஷ் அந்த இளம்பெண் வீட்டுக்கு சென்று உள்ளார்.
பின்னர் அவரிடம் பக்கத்தில் ஒரு வேலை விஷயமாக வந்தேன். கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடு என்று கேட்டுள்ளார். உடனே அந்த இளம்பெண் தண்ணீர் எடுக்க சென்றபோது மகேஷ் வீட்டுக்குள் சென்று இளம் பெண்ணை கட்டிப்பிடித்து உள்ளார். உடனே அதிர்ச்சி அடைந்த அவர், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறியபடி தப்பிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை. பின்னர் அவரை வலுக்கட்டாயமாக தூக்கிச்சென்று மகேஷ் பலாத்காரம் செய்தார்.
பாதிக்கப்பட்ட இளம்பெண் இதுகு றித்து தனது தாயாரிடம் கூறி அழுதார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், இது குறித்து காட்டூரில் உள்ள கோவை மாநகர மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமறைவாக இருந்த மகேசை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.