இருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்து திருடிச்சென்ற வாலிபர் கைது

அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார்.
இருசக்கர வாகனம் வாங்குவது போல் நடித்து திருடிச்சென்ற வாலிபர் கைது
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம் உள்ளது. இங்கு டிப் -டாப்பாக உடை அணிந்த வாலிபர் ஒருவர் வந்தார். அவர், அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் புல்லட் மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டார். மேலும், எவ்வளவு மைலேஜ் கிடைக்கும். ஒட்டி பார்க்கலாமா என கேட்டு உள்ளார். இதையடுத்து உரிமையாளரிடம் அனுமதி பெற்று புல்லட் மோட்டார் சைக்கிளை ஓட்டி பார்க்க ஊழியர் அனுமதித்தார். அப்போது அவர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

வாகன சோதனையில் சிக்கினார்.

இதற்கிடையே நேற்று பல்லடம்- திருப்பூர் மெயின் ரோட்டில் சின்னக்கரை சோதனை சாவடியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக புல்லட் மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கும்பகோணத்தைச் சேர்ந்த சங்கர பாண்டியன் (வயது 32) என்பதும், திருப்பூர் அருகே உள்ள முருங்கம்பாளையத்தில் தங்கியிருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்ததும், அவர் ஓட்டி வந்த புல்லட் மோட்டார் சைக்கிள் பல்லடம் பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிறுவனத்தில் இருந்து நூதன முறையில் திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சங்கர பாண்டியனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புல்லட் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com