கழிவறை ஜன்னல் வழியாக சக பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் எடுத்த இளைஞர் கைது

கோப்புப்படம்
இளைஞரின் செல்போனை வாங்கி பார்த்தபோது சக பெண் ஊழியர்களை ஆபாசமாக படம் பிடித்த ஏராளமான வீடியோக்கள் இருந்தது.
மதுரை அருகே உள்ள மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்த ராஜராஜேசுவரன் (வயது 33) என்பவர் வணிக பிரிவு ஆய்வாளராக வேலை செய்தார். இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவர் அங்குள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து ராஜராஜேசுவரன் சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த பெண் இயற்கை உபாதை கழித்ததை ஜன்னல் வழியாக செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதற்கிடையே சக பெண் ஊழியர்களிடம் அந்த பெண் நடந்த சம்பவம் பற்றி தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக மின்கோட்ட செயற்பொறியாளரிடம் கூறியுள்ளனர். பின்னர் அவர் சந்தேகத்தின்பேரில் ராஜராஜேசுவரனின் செல்போனை வாங்கி பார்த்தபோது அந்த அலுவலகத்தில் பணிபுரியும் சக பெண் ஊழியர்களை ஆபாசமாக கழிவறை உள்ளிட்ட இடங்களில் படம் பிடித்த ஏராளமான வீடியோக்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீசில் செயற்பொறியாளர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜராஜேசுவரனை கைது செய்தனர்.






