காதலியை வெட்டிக்கொன்று விட்டு லாரி முன் பாய்ந்து உயிரை மாய்த்த வாலிபர்..!

தனியார் தொழிற்சாலையில் பிரதீப் வேலை செய்து வந்தார்.
காதலியை வெட்டிக்கொன்று விட்டு லாரி முன் பாய்ந்து உயிரை மாய்த்த வாலிபர்..!
Published on: 

கிருஷ்ணகிரி,

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார் பேட்டை அருகே பொன்னேரியை அடுத்த ராமனூரை சேர்ந்த ஆறுமுகம் மகள் திவிஜாஸ்ரீ (வயது 21). இவர், ஒசூரில் உள்ள பிரபல தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வந்தார். இதேபோல் ஜோலார்பேட்டை அருகே சின்ன வேப்பம்பட்டியை சேர்ந்த மணியரசன் மகன் பிரதீப் (25). இவர், ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு காதலியை தனது அறைக்கு பிரதீப் அழைத்து வந்துள்ளார். அங்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த பிரதீப், தனது அறையில் இருந்த அரிவாளால் காதலியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த திவிஜாஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

காதலி ரத்த வெள்ளத்தில் இறந்ததை கண்ட பிரதீப் மனம் பதறினார். அய்யோ! காதலியை கொன்று விட்டோமே என்று கதறி அழுதபடியே அறையை விட்டு வெளியே ஓடி வந்தார். அங்கு ஓசூர் -பாகலூர் சாலையில் வந்த லாரி முன் திடீரென பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பிரதீப் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த பாகலூர் போலீசார் விரைந்து வந்தனர். பிரதீப் அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த திவிஜாஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலர்கள் இருவரும் மகிழ்ச்சியாகத்தான் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். அவர்களுக்குள் எதற்காக தகராறு ஏற்பட்டது என்பது தெரியவில்லை. அவர்களது நண்பர்களிடம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலியை கொன்று விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com