

செங்கல்பட்டு,
விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு (27). இவர் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வீடு வாடகைக்கு தங்கி, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய சந்துரு, சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற நெல்லை விரைவு ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது.
இதில், எதிர்பாராத விதமாக ரெயில் மோதியதில் சந்துரு தூக்கி வீசப்பட்டு, முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரெயில்வே போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்துரு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கினாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.