கோத்தகிரி அருகே யானை தாக்கி வாலிபர் பலி

வனப்பகுதியிலிருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிரவீனை நோக்கி ஓடிவந்து பயங்கரமாகத் தாக்கியது.
கோத்தகிரி அருகே யானை தாக்கி வாலிபர் பலி.
பிரவீன் சடலம்
Published on: 

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டு யானை தாக்கியதில், வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பாட்டியை பார்க்க சென்ற வாலிபர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவருடைய மகன் பிரவீன் (வயது 35). இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கூக்கல்தொரை இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் தனது பாட்டியைப் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். பாட்டியைப் பார்த்துவிட்டு, நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கூக்கல்தொரை - கம்பட்டி கம்பை சாலையில் பிரவீன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

யானை தாக்குதல்

அப்போது வனப்பகுதியிலிருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை ஒன்று, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பிரவீனை நோக்கி ஓடிவந்து பயங்கரமாகத் தாக்கியது. யானையின் மிதியிலும், தாக்குதலிலும் பலத்த காயமடைந்த பிரவீன், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், உடனடியாக கோத்தகிரி போலீசாருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினரும் போலீசாரும், உயிரிழந்த பிரவீனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிய வாலிபர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com