

குமரி,
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அருமனை-களி யல் சாலையில் ஒரு இளம்பெண் மற்றும் 3 வாலிபர்கள் மதுபோதையில் நடக்க முடியாமல் தள்ளாடி சாலையில் படுத்து இருந்தனர். அதில் 2 வாலிபர்கள் உடலிலும், முகத்திலும் ரத்த காயத்துடன் காணப்பட்டனர். அருகில் ஒரு மோட்டார் சைக்கிளும் இருந்தது.
அப்போது பணிக்கு செல்ல அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கடையாலுமூடு போலீஸ் நிலைய பெண் ஏட்டு பிரேமலதா, போதையில் சாலையில் வாலிபர்களுடன் இளம்பெண் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அந்த பகுதி தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்குள் வராத போதிலும், உடனடியாக அவர் வாகனத்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு அவர்களின் அருகில் சென்றார். அப்போது 3 வாலிபர்களில் ஒருவர் அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டார்.
பின்னர் மற்ற 2 வாலிபர்கள் மற்றும் இளம்பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்புவதற்கான முயற்சியில் ஏட்டு பிரேமலதா ஈடுபட்டார். ஆனால் இதற்கு 2 வாலிபர்களும் சிகிச்சைக்கு செல்ல மறுத்து அடம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த ஏட்டு பிரேமலதா அந்த வாலிபர்கள் தப்பிச்செல்லாத வண்ணம் பார்த்துக் கொண்டார்.
அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த அருமனை போலீசார் போதையில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், 2 வாலிபர்களையும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அருமனை போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் 2 வாலிபர்களில் ஒருவர் அருமனையை சேர்ந்தவர் என்பதும், இன்னொருவர் தென்காசியை சேர்ந்தவர் என்பதும், இளம்பெண் புதுக்கோட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் இவர்கள் கடந்த 5-ந் தேதி திற்பரப்புக்கு சுற்றுலா வந்து ஓட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் அங்கிருந்த இடங்களை சுற்றி பார்ப்பதற்காக வந்தபோது போதையில் காயங்களுடன் சாலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.
அவர்கள் இடங்களை சுற்றிபார்க்க சென்றபோது விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து அருமனை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.