

ஈரோடு,
ஈரோடு பாரதி நகரை சேர்ந்த சென்னப் பன் என்பவரது மகள் வினோதினி (வயது 24). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தனிஷ் (4) என்கிற மகன் உள்ளான். வினோதினிக்கும். சூர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரை பிரிந்து கடந்த 2 ஆண்டுகளாக வினோதினி மகனுடன் தனது பெற்றோர் வீட்டின் அருகே மற்றொரு வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வினோதினிக்கு 'இன்ஸ்டாகிராம்' மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் நவீன் என்கிற நவநீதிகிருஷ்ணன் (26) என் பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து நவநீதகிருஷ்ணன் அவ்வப்போது வினோதினியின் வீட்டுக்கு வந்து அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் நவநீதகிருஷ்ணனின் நடவடிக்கை பிடிக்காததால், கடந்த சில நாட்களாக வினோதினி அவருடன் சரிவர பேசாமல் இருந்துள்ளார். இதனால், வினோதினி வேறு ஒரு நபருடன் பழகி வருவதாக நவநீதகிருஷ்ணன் சந்தேகம் அடைந்து, வினோதினியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஈரோட்டுக்கு வந்த நவநீதகிருஷ்ணன், சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் மகனுடன் வினோதினி இருப்பதை உறுதி செய்தபிறகு வீட்டுக்குள் நுழைந்து வினோதினியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த நவநீதகிருஷ்ணன், வீட்டில் இருந்த மண்எண் ணெயை எடுத்துவந்து வினோதினி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். தீ உடலில் பற்றி எரிந்ததால் வலியால் அலறி துடித்த வினோதினி அருகில் இருந்த நவநீதகிருஷ்ணனையும் இறுக பிடித்துள்ளார். வினோதினியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்த நவநீதகிருஷ்ணன் தீக்காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதையடுத்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த வினோதினியை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வினோதினியிடம், ஈரோடு கூடுதல் மகளிர் கோர்ட்டு நீதிபதி அன்புசெல்வி நேரில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்தார். அதில், நவநீ தகிருஷ்ணன்தான் தன் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்தார் என்று வினோதினி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வினோதினி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து நவநீதகிருஷ்ணன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் தேடி வந்தனர். நவநீதகிருஷ்ணன் இரு கைகள் மற்றும் முகத்தில் தீக்காயம் அடைந்து, கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போலீசாருக்கு தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், நவநீதகிருஷ்ணன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ததும், உடனடியாக கைது செய்யப்பட்டு கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்படுவார். தொடர்ந்து, மருத்துவமனையில் நவநீதகி ருஷ்ணனை கண்காணித்து வருகிறோம், என்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தால் இளம்பெண் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.