காதலன் இறந்த துக்கத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கோப்புப்படம்
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காதலன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
சென்னை திருவொற்றியூர் தியாகி சத்யமூர்த்தி நகர் 8-வது தெருவைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சரோஜினி தேவி (24 வயது). கொடுங்கையூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்துவிட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இவர் கல்லூரியில் படித்தபோது வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 24-ந்தேதி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதனால் சரோஜினி தேவி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இதனால் அவரை பெற்றோர், வியாசர்பாடி பி.வி.காலனியில் உள்ள அவரது சித்தி வீட்டில் தங்க வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் சரோஜினி தேவி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி எம்.கே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.






