எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை: காப்பாற்ற முயன்றவரும் உயிரிழந்த பரிதாபம்

மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் திடீரென எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் ரெயில் நிலையம் வழியாக நேற்று காலை சுமார் 10.20 மணியளவில், எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்தது. அப்போது, ரெயில் நிலையத்தின் அருகே நின்று கொண்டிருந்த 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் திடீரென எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஆண் பயணி ஒருவர், அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார். துரதிர்ஷ்டவசமாக, தற்கொலைக்கு முயன்ற பெண், காப்பாற்ற முயன்றவர் என இருவர் மீதும் ரெயில் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாம்பரம் ரெயில்வே போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பெண்ணைக் காப்பாற்ற முயன்று உயிரிழந்தவர் மறைமலைநகர் அருகே உள்ள தாலிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (53 வயது) என்பது தெரிய வந்துள்ளது.

தற்கொலை செய்துகொண்ட பெண் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இது தொடர்பாக தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மறைமலைநகர் ரெயில் நிலையம் அருகே பரபரப்பான காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com