கணவரை ஜாமீனில் எடுக்க முடியாத மனவேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

தூத்துக்குடியில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் வாலிபர் ஒருவர், கைது செய்யப்பட்டு, கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார்.
இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவரை ஜாமீனில் எடுக்க முடியாத மனவேதனையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதல் திருமணம்

தூத்துக்குடி தாளமுத்துநகர் சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம் 2-வது தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(எ) கருப்பு (வயது 22). இவரது மனைவி திவ்யா(19). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு 7 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

கணவரை ஜாமீனில் எடுக்க முடியாததால் மனவேதனை

இதற்கிடையில், முத்துக்குமார் தாளமுத்துநகரில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, கடந்த 7 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். சிறையில் உள்ள கணவரை ஜாமீனில் வெளியே கொண்டு வர திவ்யா பலமுறை முயற்சி செய்தும், அவரை ஜாமீனில் எடுக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் திவ்யா கடும் மனவேதனையில் இருந்து வந்தார்.

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

இந்த நிலையில், தனது மாமியார் நாகம்மாள் வீட்டில் இருந்த திவ்யா, இன்று தனது 7 மாத ஆண் குழந்தையை வீட்டு வாசலில் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டார். பின்னர் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றித் தீ வைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தீ மளமளவெனப் பரவி உடல் முழுவதும் எரிந்ததில் திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமாரவேல் பாண்டியன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, திவ்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சார் ஆட்சியர் விசாணை

திவ்யாவுக்குத் திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள்ளேயே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால், தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சுனில் மற்றும் தூத்துக்குடி சார் ஆட்சியர் ஆகியோர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X