காதல் திருமணம் செய்த 12-வது நாளில் இளம்பெண் தற்கொலை - போலீசார் விசாரணை

ஜீவிதா மருத்துவருக்கு படித்து இருந்தாலும், தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வருத்தமாக இருந்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள பூமலூர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுடைய மகள் ஜீவிதா (25 வயது). இவர், எம்.பி.பி.எஸ். படித்துள்ளார். ஜீவிதாவுக்கும், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே தென்னமநல்லூர் கள்ளிமேட்டை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான அபிஷேக் (28 வயது) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது.

இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், கடந்த 11-ந்தேதி வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தான் திருமணம் செய்து கொண்டதாக ஜீவிதா தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். காதல் தம்பதி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை தொடங்கினர்.

ஜீவிதா மருத்துவருக்கு படித்து இருந்தாலும், அவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி அவர் தனது பெற்றோர் மற்றும் தோழிகளிடம் கூறி புலம்பி உள்ளார். அதற்கு அவர்கள் ஆறுதல் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜீவிதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தொண்டாமுத்தூர் போலீசார் விரைந்து சென்று, ஜீவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக கோவை வடக்கு ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த 12-வது நாளில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com