

திருவொற்றியூர்,
அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை கண் எதிரேயே இளம்பெண் பலியானார்.
எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் 1-வது தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் திருவளர் செல்வி (வயது 21). பி.காம் பட்டப்படிப்பு படித்துள்ளார். இவருக்கு அடுத்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மகேந்திரன் ஓட்டி வந்தார்.
திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது இதில் தந்தை-மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் திருவளர்ச்செல்வி தலை மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தந்தை எண் எதிரேயே அவர் தலை நசுக்கி பரிதாபமாக இறந்தார்.
மகேந்திரன் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். அவர், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான திருவொற்றியூர் கலைஞர் நகரை சேர்ந்த சரவணன் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.