வெளியூரில் வேலை பார்க்க பிடிக்காததால் 2½ வயது மகனை கொன்று இளம்பெண் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம்

வெளியூரில் வேலை செய்ய பிடிக்காததால் 2½ வயது மகனை கொன்று விட்டு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தர்மபுரி,

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூர் மாவட்டம், லதாரா அடுத்த துத்மானியாவை சேர்ந்தவர் பவன்சிங் பாட்லே (30 வயது). இவரது மனைவி சந்தியாபாய் (29 வயது). இவர்களுக்கு 2½ வயதில் பிரபேஷ்சிங் என்ற ஆண் குழந்தை இருந்தது.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள தனியார் நூற்பாலையில் பவன்சிங் பாட்லே கடந்த 10 ஆண்டுகளாக மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் குடும்பத்துடன் நூற்பாலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார். மேலும் சந்தியாபாயும் அதே மில்லில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக சந்தியாபாய் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரை விட்டு வெளியூரில் வந்து தங்கி பணிபுரிவது பிடிக்கவில்லை என்று அவர் அக்கம் பக்கத்தினரிடம் வேதனையோடு கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் பவன்சிங் பாட்லே மட்டும் தனியாக நண்பர்களுடன் கேரளாவிற்கு 3 நாள் சுற்றுலா சென்றுவிட்டு நேற்று முன்தினம் வந்தார். பின்னர் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வேலை முடிந்தவுடன் நேற்று காலை அவர் வீட்டிற்கு வந்தார். அப்போது பவன்சிங் பாட்லே, வீட்டின் கதவை நீண்ட நேரம் தட்டியும் அவரது மனைவி கதவை திறக்கவில்லை. இதனால் அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது குழந்தை பிரபேஷ்சிங் இறந்து கிடந்தது. மேலும் சந்தியாபாய் வீட்டின் விட்டத்தில் கயிற்றால் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். இது பற்றி தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தாய், மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.

இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். விசாரணையில், வெளியூரில் தங்கி வேலை செய்ய பிடிக்காததால் மன வேதனையில் இருந்த சந்தியாபாய் தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளியூரில் வேலை செய்ய பிடிக்காததால் 2½ வயது மகனை கொன்றுவிட்டு வடமாநில பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com