

சென்னை,
சென்னை போரூரில் வாலிபரிடம் திருமண ஆசைக்காட்டி ரூ.14 லட்சம் நகை சுருட்டிய இளம்பெண்ணால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போரூரை அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வாலிபர் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் அறிமுகம் ஆனார். தினமும் பூங்காவில் நடைப்பயிற்சி சென்றபோது இருவரும் நெருங்கி பழகி வந்தனர். அந்த இளம்பெண் நடைப்பயிற்சியின் போது அவரது அழகில் மயங்கிய வாலிபர் கேட்கும்போதெல்லாம் பணம் உதவி செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில் கணவரை பிரிந்து இருப்பதாக கூறிய இளம்பெண் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் பின்னர் திருமணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவித்தார். இதனையடுத்து அந்த வாலிபர் இளம்பெண்ணை காரம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தங்க வைத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தார். இருவரும் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த மாதம்17-ம் தேதி தனது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக திரிபுராவுக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனால் சந்தேகம் அடைந்த பாரதி வீட்டில் உள்ள பீரோவை சரிபார்த்தபோது அதில் இருந்த 25 பவுன் நகை, ரூ.14 லட்சம் ரொக்கம் மாயமாகி இருந்தன.
இதுகுறித்து வாலிபர் இளம்பெண்ணின் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது சரியாக பதில் அளிக்காமல் வேலையாக உள்ளேன் பின்னர் பேசுகிறேன் என கூறி தொடர்பை துண்டித்துவிட்டார். பின்னர் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டது.
திருமண ஆசை காட்டி இளம்பெண் நூதன முறையில் நகை, பணத்தை சுருட்டி தப்பி சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அந்த வாலிபர் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இளம்பெண் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.